ஐஆர்சிடிசி இணையம் முடங்கியது: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு


இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) விண்ணப்பம் மற்றும் இணையதளம் இன்று டிசம்பர் 26ம் தேதி காலை திடீரென முடங்கியது. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பல பயணிகள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் செயலிழப்பைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டர், அறிக்கைகளில் இதனை சுட்டி காட்டியுள்ளது. இதனிடையே, இது குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

இன்று காலை தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பல பயணிகள் பரிதவித்தனர். IRCTC செயலியைத் திறக்கும் போது, ​”பராமரிப்புச் செயல்பாடு காரணமாக செயலைச் செய்ய முடியவில்லை” என்ற அறிவிப்பு வந்ததாக பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இதனிடையே, ”இந்த மோசடி எப்போது நிறுத்தப்படும், எப்போதும் காலை 10 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழக்கும், மீண்டும் திறக்கும் போது அனைத்து தட்கல் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும், ஆனால் இரட்டிப்பு விலையில் பிரீமியம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவுக்கு கிடைக்கும். மேலும், மோசடியை அழிக்க IRCTC அதிகாரிகளை டாக் செய்து ஒரு பயனர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போல் கடந்த டிசம்பர் 9ம் தேதி இ-டிக்கெட்டிங் பிளாட்பார்ம் ஒரு மணி நேர பராமரிப்புக்கு உட்பட்டு செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

x