மகாராஷ்டிரா தேர்தலில் வாக்காளர் நீக்கம், பெயர் சேர்ப்பு இஷ்டத்துக்கு நடைபெறவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்


மகாராஷ்டிரா தேர்தலின் போது இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்ப்பு இஷ்டத்துக்கு நடைபெறவில்லை என காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் இஷ்டத்துக்கு நீக்கப்பட்டு. 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டதாகவும், வாக்குப் பதிவு சதவீதம் மாலை 5 மணி நிலவரத்தை விட , இரவு 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது மிகவும் அதிகமாக இருந்தது எனவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் நீக்கமோ, சேர்ப்போ இஷ்டத்துக்கு நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை பொறுத்தவரை, மாலை 5 மணி நிலவரத்தையும், இறுதி நிலவரத்தையும் ஒப்பிடுவது சரியல்ல. மாலை 5 மணி நிலவரத்தை விட, இரவு 11.45 மணியளவில் அறிவிக்கப்படும் இறுதி முடிவில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பது இயல்பானதுதான். உண்மையான வாக்குப்பதிவு தரவை மாற்றுவது சாத்தியமில்லாதது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வாக்குப்பதிவு விவரங்களைக் கொண்ட சட்டப்பூர்வ படிவம் 17 சி இருப்பதால் உண்மையான வாக்குப்பதிவை மாற்ற முடியாது.

மகாராஷ்டிர தேர்தலில் விதிமுறைகள் வெளிப்படையாக பின்பற்றப்பட்டன. வாக்காளர் பட்டியலில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும், மகாராஷ்டிரா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றுகிறது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் வரவேற்கிறது. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

x