பஞ்சாபில் 4 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று காலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அவர் ஹரியானாவின் அம்பாலா நகரைச் சேர்ந்த அபிஷேக் என தெரியவந்தது.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் 17 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 60 சதவீத இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி தீபக் பரீக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர், பக்கத்தில் இருந்த காலி இடத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் பள்ளம் தோண்டி உள்ளார். அப்போது அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எக்ஸ் தலத்தில், “மொகாலியில் கட்டிடம் இடிந்து விழுந்தது வருத்தம் அளிக்கிறது. அப்பகுதியில் மீட்புப் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.