புதுடெல்லி: அமித்ஷாவின் கருத்துக்கு எதிரான போராட்டத்தின்போது நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?. நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?. நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?. அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?. உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?’ எனத் தெரிவித்துள்ளார்
அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் டிசம்பர் 19ம் தேதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸை குற்றஞ்சாட்டினர். காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தின் போது பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்தார். நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளிவிட அவர் தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக சாரங்கி குற்றஞ்சாட்டினார். மற்றொரு பாஜக எம்.பியான முகேஷ் ராஜ்புத் காயமடைந்து டெல்லியின் ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. எம்.பிக்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜுஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது.