வாராணசியில் கங்கை நதிக்கரையில், ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில், “என் தாய் உயிருடன் இருந்த போது நான் உயிரியல் ரீதியாக பிறந்ததாக நம்பினேன். அவர் இறந்த பிறகு என் எல்லா அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தபோது கடவுள்தான் என்னை அனுப்பினார் என்று உணர்கிறேன்” என கூறியிருந்தார்.
பிரதமரின் இந்தக் கருத்து நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ‘கடவுள்தான் என்னை அனுப்பினார்’ என்ற பிரதமர் மோடியின் கருத்து பற்றி கூறும்போது, “பரமாத்மாவின் (கடவுள்) கதையை பிரதமர் மோடி ஏன் கூறினார் என்று தெரியுமா? ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அதன் பிறகு அமலாக்கத் துறை பிரதமர் மோடியிடம் தொழிலதிபர் அதானியின் ஊழல் பற்றி கேள்வி கேட்கும்.
அப்போது, என்னுடைய செயல்பாடுகளுக்கு எல்லாம் பரமாத்மாதான் காரணம் என்று கூறுவார்” என்றார். மேலும் ராகுல் காந்தி பேசும்போது, “மோடிஜி, நீண்ட நெடிய உரையையும் நாட்டை பிரிக்கும் முயற்சியையும் நிறுத்துங்கள். நாட்டில் உள்ள இளைஞர்களில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பிஹார் மக்களிடம் கூறுங்கள்.
வரும் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைக்காது. நாடு முழுவதும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரும் ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் ரூ.8,500 செலுத்தப்படும். இதுபோல அக்னிபாதை திட்டம் ரத்து செய்யப்படும்” என்றார்.