ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.
முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். 1989-ல் இவர் முதல்முறையாக ஹரியானா முதல்வராக பதவியேற்றார். ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். 1990 மற்றும் 1991-ல் சவுதாலா 2 முறை குறுகிய காலத்துக்கு முதல்வராக பதவி வகித்தார். இதன் பிறகு 1999 முதல் 2005 வரை இரண்டு முறை ஹரியானா முதல்வராக பதவி வகித்தார்.
ஹரியானாவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் 2013-ல் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சிங் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி அரசின் 6 மாத தண்டனை குறைப்பை தொடர்ந்து 2021-ல் சவுதாலா விடுதலையானார்.
எனினும் சொத்துக்குவிப்பு வழக்கில் 2022-ல் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் 87 வயதில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட மிக வயதான கைதி என்ற பெயரை பெற்றார்.
இவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா துணை முதல்வராக பதவி வகித்துள்ளார். ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.