நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நிறைவு: அமித் ஷா ராஜினாமா கோரி இறுதி நாளிலும் இண்டியா கூட்டணி போராட்டம்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அமைச்சர் அமித் ஷா ராஜினாமா கோரி இறுதி நாளிலும், இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இரு அவைகளும் நேற்று மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதில் அதானி குழுமம், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு போட்டியாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அங்கம் வகிக்கும் அமைப்புக்கு, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கும் விவகாரத்தை பாஜக.,வினர் எழுப்பினர். அதானி குழுமத்தின் நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியின் 14 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினை குறித்து பேச அனுமதி அளிப்பது பாரபட்சம் என இண்டியா கூட்டணியினர் குற்றம் சாட்டினார். இதனால் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தனர். அது நிராகரிக்கப்பட்டது.

இந்த கூட்டத் தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அதன்பின் அரசியலமைப்பின் 75-வது ஆண்டை முன்னிட்டு அதன் பெருமை மிகு பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் ராஜினாமா செய்யக் கோரி இண்டியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அம்பேத்கர் சிலையிலிருந்து பேரணியாக வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களை, நுழைவு வாயிலில் பாஜக எம்.பிக்கள் போராட்டம் நடத்தி தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்றும், அம்பேத்கர் பற்றிய அவமதிப்புக்கு அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக்கோரி, இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி விஜய் சவுக்கிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி சென்றனர். இவர்களின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

x