மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு


புதுடெல்லி: மாநிலங்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொடுத்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் இடையேயான தொடர்பு குறித்து பாஜக எம்.பி.க்கள் பேசுவதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சுமத்தினர்.

இதனால் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் எனவும், இதனால் அவரை நீக்க கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. மாநிலங்களவை வரலாற்றில் அவைத் தலைவரை நீக்க கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது இது வே முதல் முறை. அதை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நேற்று நிராகரித்தார்.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில் கூறியதாவது: மாநிலங்களவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு விதிமுறைப்படி 14-நாள் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. அவைத் தலைவரின் பெயரில் எழுத்துப் பிழை உள்ளது. இதன் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது. இந்த தீர்மானத்தில் 60 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும் என்ற விதிமுறை மட்டுமே சரியாக பின்பற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவர் மீது குற்றம் சாட்டி இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் துணைத்தலைவருக்கு எதிராக குற்றம் சுமத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் தெரிவித்தார்.

x