இண்டியா கூட்டணி போராட்டம் முதல் ஐசிசி அறிவிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


அமித் ஷா பேச்சு: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக, காங்., போராட்டம் - அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸை குற்றஞ்சாட்டினர். காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

“ஆளும் கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தியை தாக்கினர்” - ஆளும் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உடல் ரீதியாக தாக்கியதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி.,க்கள் எழுதியுள்ள கடிதத்தில், “அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் துவார் வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர்.

இதையடுத்து நாங்கள் மகர் துவார் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உடல்ரீதியாக தாக்கினர். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்."என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல், நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்பிக்களால் தான் தாக்கப்பட்டதாகவும், எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளினார் அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்து காயமடைந்தேன் என பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார்.

அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்: அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இதன் மூலம் நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய பேச்சு மற்றும் பேசிய விதம் சந்தேகத்துக்கு இடமின்றி மோசமானது.

அரசியல் சாசன தலைமை சிற்பியாக விளங்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: காங்கிரஸ் - அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்காக தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அமித் ஷா பதவி விலகக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது “அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜக எண்ணுகிறது,” என்று அவர் விமர்சித்தார். இதேபோல், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி’- அமைச்சர் ரகுபதி - “மத்திய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் ‘வலிக்காமல் வலியுறுத்த’ கூட மனமில்லாமல் அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

பிற மாநில கழிவுகள் விவகாரத்தில் நடவடிக்கைகள் தேவை: இபிஎஸ் - பிற மாநில கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தேவை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், “கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் ஸ்டாலின்-க்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்” என்று சாடியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை தொடக்கம்: மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது - ஐசிசி அறிவிப்பு - அடுத்த ஆண்டு தொடங்கும் ஐசிசி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2028-ம் ஆண்டு வரை ஐசிசி நடத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் ஹைபிரிட் மாடலின்படி பொதுவான இடத்தில் நடைபெறும். எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025, ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை 2026 ஆகிய போட்டிகள் அனைத்துக்கும் இது பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சி - பாஜக குற்றச்சாட்டு: தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது

x