நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு; பாஜக எம்.பிக்கள் காயம் - ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு!


புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி, பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸை குற்றஞ்சாட்டினர். காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

2intha போராட்டத்தின் போது பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளிவிட அவர் தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக சாரங்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர், ‘ராகுல் காந்தி என் மீது எம்.பி.யை தள்ளிவிட்டதால் நான் கீழே விழுந்தேன்.. நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ​​ராகுல் காந்தி வந்து, என் மீது எம்.பியை தள்ளினார்’ என்றார்

காயமடைந்த பாஜக எம்.பி.க்களில் ஒருவரான முகேஷ் ராஜ்புத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், டெல்லியின் ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.பிக்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜுஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்

x