புதுடெல்லி: அம்பேத்கர் குறித்த தனது கருத்து திரிக்கப்பட்டதாகவும், அம்பேத்கருக்கு எதிராக தன்னால் ஒருபோதும் பேச முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,"எனது கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொய்யான செய்திகளைப் பரப்புகிறது. அம்பேத்கருக்கு எதிராக என்னால் ஒருபோதும் பேச முடியாது. நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் திரிபுபடுத்திய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனது முழு பேச்சையும் மக்கள் முன் வைக்க ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று அமித் ஷா மேலும் கூறினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்’ எனப் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர், “அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால், அவரை நள்ளிரவுக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும், அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அப்போதுதான் மக்கள் அமைதியாக இருப்பார்கள். அம்பேத்கருக்காக மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளனர்" என்று கார்கே கூறினார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, “காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. காங்கிரஸ் அரசுகள் ஒருபோதும் அம்பேத்கர் நினைவிடத்தை கட்டவில்லை. அவருடன் தொடர்புடைய பல தளங்களை உருவாக்கியது பாஜக அரசுகள்தான். அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில் அரசியலமைப்பு தினத்தை மோடி அரசு அறிவித்தது” என்றார். மேலும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.