இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்குக; சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் அன்புமணி கோரிக்கை!


புதுடெல்லி: இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்க வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மகிமைமிகு 75 ஆண்டுகள் என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிகழ்த்திய உரையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நான் தலைவணங்கு கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்களுக்கும் இந்த அற்புதமான ஆவணத்தை உருவாக்கித் தந்ததற்காக நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 2047ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதை இந்தியப் பிரதமர் அவ்வப்போது கூறிவருகிறார். அந்த இலக்கை எட்ட நாம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும். வளர்ச்சி என்பது வேறு, மேம்பாடு என்பது வேறு. வளர்ச்சி என்பது நிதி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது.

மேம்பாடு என்பது, சாதாரண, அடித்தட்டு மக்கள், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வளர்ச்சி தொடர்பானது. அவர்கள் வளர்ச்சியடைய வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நம்மால் எட்ட முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15ல் நான்காவது பிரிவு சமூக, கல்வி ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக நிகர்நோக்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது குறித்து வலியுறுத்துகிறது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு பல்வேறு தடைகளும், முட்டுக்கட்டைகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன. நேரமின்மை காரணமாக நலிவடைந்த மக்களை பாதிக்கக் கூடிய 3 முக்கியப் பிரச்சினைகள குறித்து மட்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்பு கிறேன். முதலாவது இடஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இரண்டாவது கிரீமிலேயர், மூன்றாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருந்தாலும், நேரமின்மை காரணமாக இந்த விசயங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன்.

நாம் எதற்காக இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்? அதற்காக இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு நிறைவேற்றினோமா, இல்லை. 1962 - 63ம் ஆண்டில் பாலாஜி மற்றும் மைசூர் மாகாண அரசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், பின்னர் 1993ம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்ததன் அடிப்படையிலும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இதில் நாடாளுமன்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இதே நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதையும் சேர்த்து இடஒதுக்கீட்டின் அளவு 50% கூடுதலாக இருந்தாலும் கூட, அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காலம் காலமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் பாகுபாடு இழைக்கப்படுகிறது.

இந்தியாவில் பட்டியலினத்தவரின் மக்கள் தொகை 15%, அவர்களுக்கு மத்திய அரசில் 15% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் மக்கள்தொகை 7.5%, அவர்களுக்கும் அதே அளவு இடஒதுகுகீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை என்னை பொறுத்தவரை 62%, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 54%, ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் வெறும் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிராக மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் பாகுபாடு காட்டப்படுகிறது? அது மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக கிரிமிலேயர் என்ற தத்துவமும் உள்ளது. மத்திய வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பப்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம், சுமார் 18% என்ற அளவிலேயே உள்ளது. சில புள்ளி விவரங்கள் இதை 21% என்று கூறுகின்றனர். பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதே பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்-ஏ பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாக உள்ளது.

கிரிமிலேயர் பிரச்சினைக்கு வருகிறேன். நாம் கிரிமிலேயர் என்ற தத்துவத்தை கடைபிடிக்க வேண்டுமா? அரசியலமைப்புச் சட்டத்தில் அது இருக்கிறதா? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள். பட்டியலினத்தவருக்கோ, பழங்குடியினருக்கோ கிரிலேயர் இல்லை, அவ்வாறு இருக்கும் போது ஓபிசி-க்கு மட்டும் ஏன் கிரிமிலேயர். மத்திய அரசுப் பணிகளில் கிரிமிலேயர் அல்லாத ஓபிசி-க்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டதுபோக, மீதமுள்ள இடங்களை கிரிமிலேயர்களைக் கொண்டு நிரப்பும் வகையிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். நான் எழுப்பவிருக்கும் மூன்றாவது பிரச்சினை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, மத்திய மாநில அரசுகள் பழைய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், 95 ஆண்டுகளுக்கு முன் 1931ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் நிகர்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

நாம் ஏன் புதிய சாதிவாரி மக்கள் தொகை விவரங்களை வைத்திருக்கக் கூடாது? நாம் புதிய நிகழ்கால, பொருத்தமான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை வைத்திருக்க வேண்டும். நிகர்நோக்கு நடவடிக்கைகளை அதிக அளவில் மேற்கொள்ளவும், சமூகத்தின் நிலையை அறிந்துகொள்ளவும் இது மிகவும் அவசியம். அதற்காக நாம் ஏன் தயங்க வேண்டும்? இந்தியா விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலத்தில் ஏராளமான அரசுகள் வந்துவிட்டன. ஆனால் எந்த அரசும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. ஆனால், அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் சாதியின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் ஏன் அதை செய்யக்கூடாது? இந்த தரப்பையோ, அந்த தரப்பையோ குறைக்கூற நான் விரும்பவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் சாதி என்ற ஒரே ஒரு பத்தியை சேர்க்க வேண்டியது மட்டும் தான். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை நாம் மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தவரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது, பழங்குடியினரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது, சிறுபான்மையினரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது. அதேபோல், ஓபிசி-க்களுக்கும் ஒரு பத்தி சேர்க்க வேண்டும். அத்தகைய ஒரு பத்தியை சேர்த்து ஓபிசி-க்களின் மக்கள் தொகையை மட்டுமின்றி, அவர்களின் சமூக நிலையையும் அறிந்துகொள்ள அரசு தயங்குவது ஏன்? இதற்காக 1948ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் நாம் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது ஓபிசி என்ற பிரிவு இல்லை, பட்டியலினத்தவர், பழங்குடியினர் மட்டும்தான் இருந்தனர். அதனால், இப்போது அதை செய்ய வேண்டும்.

இன்னொரு பிரச்சினையை நான் எழுப்ப விரும்புகிறேன். நமது பிரதமர் ரோகிணி ஆணையம் என்ற பெயரில் ஓர் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பட்டவர்த்தனமாக தெரியும் வகையில் பல பாகுபாடுகள் உள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.90 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்கின்றன. மீதமுள்ள 2.66 விழுக்காட்டை 994 சாதிகள் பகிர்ந்து கொள்கின்றன. இதில் முரணான கொடுமை என்ன வென்றால், 983 சாதிகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதுதான். இந்தப் பிரச்சினையை நாம் சரி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் இந்தச் சிக்கலை சரி செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள் முன்னேறினால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும்.

இந்த அவையின் முன்னவர் ஏற்கெனவே கச்சத்தீவு பிரச்சினை குறித்து குறிப்பிட்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, கச்சத்தீவை சட்டவிரோதமாக இலங்கைக்கு தாரைவார்த்தார். அதற்காக இந்த அவையில் எந்தச் சட்டமும் நிறைவேற்றப் படவில்லை. அப்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது. அப்போது இரு தரப்பினரும் அமைதியாக இருந்துவிட்டனர். கடந்த வாரம் 40 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டு முழுவதும் 569 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3, 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்ககான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தமிழர்களின் பிரச்சினை அல்ல, இந்தியர்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் சிக்கலுக்கு மூலக் காரணம் கச்சத்தீவு தான் என்பதால், அதை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

x