புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு 269 பேர் ஆதரவும், 198 எம்.பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இம்மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கூட்டுக்குழு பரிசீலனையின்போது அனைத்து கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 269 பேர் ஆதரவும், 198 எம்.பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப் படுகிறது. இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும்.