புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார்.