புதுடெல்லி: மே.வங்கத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தங்காவில் பாபர் மசூதியை போன்று ஒரு மசூதி கட்டப்படும் என ஆளும் டிஎம்சி எம்எல்ஏ ஹுமாயுன் கபீர் கடந்த வாரம் அறிவித்தார். ‘‘நூறு பேர் கொண்ட அறக்கட்டளை அமைத்து 2 ஏக்கரில் மசூதி கட்டப்படும். இதற்கு ரூ.1 கோடி நன்கொடை தருவேன்’’ என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக அதே மாவட்டத்தின் பெர்ஹாம்பூரில் அயோத்தியில் இருப்பது போன்று ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அக்னிமித்ரா பால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மசூதிக்கு இணையாக எனக் கருதா மல் பாபர் மசூதியை போல் ராமர் கோயிலும் கட்டப்படுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அயோத்தி ராமர் கோயிலின் முதல் வருட நிறைவில் ஜனவரி 22-ல் நாங்கள் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்குவோம். இக்கோயில் ரூ.10 கோடி செலவில் கட்டப்படும்” என்றார்.
முன்னதாக டிஎம்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் தனது அறிவிப்பில், “1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 வருடங்களாகியும் இன்னும் மீண்டும் கட்டப்படவில்லை. இதனை 35 சதவீத முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டி முர்ஷிதாபாத்தில் கட்டுவோம். இதற்காக நிலம் அல்லது மானியம் கேட்டு மத்திய, மாநில அரசுகளை அணுக மாட்டோம்’’ என்றார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த 2019, நவம்பர் 9-ல் அளித்த தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இதனால் உ.பி.யில் முடிவுக்கு வந்த அயோத்தி அரசியல், மேற்கு வங்கத்திற்கு மாறுகிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.