தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அயோத்தி ராமர் கோயிலை கட்டியவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி பூ மழை பொழிந்து கவுரவித்தார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு சிலர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றனர்.
வரும் ஜனவரியில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்துள்ளன. மகா கும்பமேளா ஆன்மிக ஒற்றுமை திருவிழாவாக அமையும். பல்வேறு வரலாற்று சாதனைகளை படைக்கும். பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அந்த காலத்தில் உயரிய வகை துணிகளை நெய்தவர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. இதன்காரணமாக பாரம்பரிய துணி நெசவாளர்கள் அழிந்தனர். அவர்களின் கைவினை தொழிலும் அழிந்தது.
தற்போது அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி பூ மழை பொழிந்து கவுரவித்தார். பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார்.