டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: புதுடெல்லியில் கேஜ்ரிவால், கல்கஜியில் அதிஷி போட்டி


புதுடெல்லி: டெல்லி சட்டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் இறுதி வேட்​பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளி​யிட்​டது. இதில் புதுடெல்லி தொகு​தி​யில் அர்விந்த் கேஜ்ரிவாலும், கல்கஜி தொகு​தி​யில் முதல்வர் அதிஷி​யும் போட்​ட​யிடு​கின்​றனர்.

டெல்​லி​யில் மொத்தம் உள்ள 70 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்​துப் போட்​டி​யிடு​வதாக திட்​ட​வட்​டமாக அறிவித்​துள்ளது. பாஜக, காங்​கிரஸ் ஆகிய கட்சிகளும் போட்​டி​யிடு​கின்றன. இதனால் டெல்லி தேர்​தலில் மும்​முனை போட்டி ஏற்பட்​டுள்​ளது.

இந்நிலை​யில், ஏற்கெனவே வேட்​பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி வெளி​யிட்​டது. மீதமுள்ள 38 தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளி​யிட்​டது. இதில் டெல்லி முதல்வர் அதிஷி கல்கஜி தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். புதுடெல்லி தொகு​தி​யில் ஆம் ஆத்மி ஒருங்​கிணைப்​பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் களமிறங்​கு​கிறார். பாபர்​பூர் தொகு​தி​யில் சுற்றுச்​சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார்.

சுகா​தாரத் துறை அமைச்சர் சவுரப் பரத்​வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகு​தி​யிலும், சுகா​தாரத் துறை முன்​னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஷகுர் பஸ்தி தொகு​தி​யிலும் போட்​டி​யிடு​கின்​றனர். இந்நிலை​யில் புதுடெல்லி தொகு​தி​யில் அர்விந்த் கேஜ்ரி வாலை எதிர்த்து பர்வேஷ் வர்மாவை பாஜக களமிறக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. டெல்லி முன்​னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மா​வின் மகன்​தான் பர்வேஷ்.

அதேபோல் முன்​னாள் முதல்வர் ஷீலா தீக்​சித் மகன் சந்தீப் தீக்​சித்தை வேட்​பாளராக காங்​கிரஸ் அறிவித்​துள்ளது. இதனால் இந்தத் தொகு​தி​யில் கடும் போட்டி ஏற்பட்​டுள்​ளது. தவிர புராரி தொகு​தி​யில் சஞ்சீவ் ஜா, பத்லி தொகு​தி​யில் அஜேஷ் யாதவ், ராஜிந்தர் நகரில் துர்​கேஷ் பதக், ஓக்லா​வில் அமானத்​துல்லா கான் ஆகியோர் ஆம் ஆத்மி சார்​பில் போட்​டி​யிடு​கின்​றனர்.

கட்சி வேட்​பாளர்கள் பட்டி யலை வெளி​யிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், ‘‘டெல்லி தேர்​தலில் பாஜக முதல்வர் வேட்​பாளர் என்று யாரும் இல்லை. அவர்​களுக்கு குழு இல்லை, திட்டம் இல்லை, டெல்​லியை பற்றி கவலை​யில்​லை’’ என்று கூறினார். டெல்​லி​யில் பெண்​களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகுதி வழங்க, முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்​சரவை கடந்த 2 நாட்​களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்​கியது.

இதுகுறித்து கேஜ்ரிவால் கூறும்​போது, ‘‘விரை​வில் தேர்தல் அறிவிக்​கப்பட உள்ளதால், இந்தத் தொகையை உடனடியாக வழங்க ​முடி​யாது. தேர்​தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று 3-வது ​முறையாக ஆட்சி அமைத்​தால், பெண்​களுக்கு ​மாதம் ரூ.2,100 வழங்​கப்​படும்’’ என்று வாக்​குறுதி அளித்​தார்​.

x