மக்களவையில் ராகுல் காந்தி; பாஜக எம்.பி.க்கள் காரசார விவாதம்


புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சாசனம் தொடர்பாக மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக எம்பிக்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மக்களவையில் நேற்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய அரசியமைப்பு சாசனத்தில் சிவன், குருநானக், புத்தரின் சிந்தனைகள் நிறைந்துள்ளன. ஆனால் அரசியலமைப்பு சாசனத்தில் இந்தியருக்கான அம்சம் எதுவுமே இல்லை என்று சாவர்க்கர் குற்றம் சாட்டினார்.

இந்த நேரத்தில் மகா பாரத கதையை நினைவுபடுத்த விரும்புகிறேன். வேடனின் மகன் ஏகலைவனை, சீடராக ஏற்க துரோணர் மறுத்தார். எனினும் அவரின் உருவத்தை சிலையாக செய்து ஏகலைவன் தினமும் வில்வித்தை பயிற்சி செய்து வந்தான். இறுதியில் அர்ஜூனனைவிட ஏகலைவனின் திறமை அதிகரித்தது. இறுதியில் ஏகலைவனின் வலது கை கட்டை விரலை, குரு தட்சணையாக துரோணர் பெற்றார். இன்றைய மத்திய அரசு, இளைஞர்கள், விவசாயிகளின் கட்டை விரலை வெட்டுகிறது.

உத்தர பிரதேசம் ஹாத்ராஸில் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். ஆனால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடுகளில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை அரசியலமைப்பு சாசனத்தில் இல்லை. ஆனால் மனு தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உடைப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் ராகுலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, “நாடு சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை நடத்தி வருகிறது. தற்போது காங்கிரஸின் கொள்கை, கோட்பாடுகளை மக்கள் புறக்கணித்து உள்ளனர். ஷியாம பிசாத் முகர்ஜி, தீன தயாளின் கொள்கைகளை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி சிறுபிள்ளை போன்று பேசுகிறார். அவருக்கு யாராவது நல்ல புத்தி புகட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரின் கொள்கை, கோட்பாடுகளை எதிர்த்தார் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாவர்க்கர் வீரதீரமாக போராடினார். இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே, அவருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

பல்வேறு பாஜக எம்பிக்கள் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இரு தரப்பினர் இடையே அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

x