புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி இந்திரபிரஸ்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகர் வினித் சூரி தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அத்வானி இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தன.
எனினும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலையும் மருத்துவமனை வெளியிடவில்லை.
தற்போது 96 வயதாகும் எல்.கே.அத்வானி 2 நாட்களுக்கு முன்னரும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கமான பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் அத்வானி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியது. பிறகு அதே நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுபோல் கடந்த ஜூலை மாதமும் அப்போலோ மருத்துவமனையில் அத்வானி மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதிக்கப்பட்டார். முழு இரவு கண்காணிப்புக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.