புதுடெல்லி: டெல்லி செல்வோம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் தண்ணீர் பீய்ச்சியடித்து நிறுத்தினர். இதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி முதல் டெல்லி நகரம் நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நிறுத்தினர். இருப்பினும், கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடந்த முயன்றனர்.
இதையடுத்து விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் வருகிற 17-ம் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் 101 விவசாயிகள் அடங்கிய குழு டெல்லி நோக்கி பேரணியை தொடங்கியது. அப்போது ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்பு பகுதியில் அவர்கள் கூடினர். இதைத் தொடர்ந்து ஹரியானா போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதில் 18 விவசாயிகள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள், டெல்லி செல்வோம் போராட்டத்தை நேற்று தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
நேற்று ஷம்பு எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியா விவசாயிகளுடன் இணைந்து கொண்டார்.
போராட்டம் தொடர்பாக விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, “தற்போது டெல்லி செல்வோம் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்ததில் 18 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மற்றொரு விவசாய சங்கத் தலைவர் மஞ்சித் சிங் ராய் கூறும்போது, “போலீஸார் ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை நோக்கி சுட்டுள்ளனர். இது ஒரு விவசாயி படுகாயமடைந்துள்ளார். போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்வோம்" என்றார்.