வயநாடு நிலச்சரிவு நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராட்டம்


புதுடெல்லி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி உட்பட கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, ‘வயநாடு மக்களுக்கு நீதி வேண்டும்’, ‘வயநாடு மக்களுக்கு நிவாரணம் வேண்டும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வயநாடு நிலச்சரிவை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தினோம். மேலும் பிரதமர் நரேந்திர மேடி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

இதுபோல் காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்திலும் பெரிய அளவில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டது. இதற்கும் நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இரண்டுமே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்பதால் நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அனைவரும் இந்த நாட்டின் குடிமகன்கள் என்ற அடிப்படையில், பாகுபாடு காட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

x