மகா கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து


மகா கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்க உள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பிரயாக்ராஜுக்கு நேற்று பிற்பகல் சென்றார். திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்தார். பின்னர் அனுமன் கோயில், சரஸ்வதி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

அதன்பிறகு மகா கும்பமேளா நடைபெறும் இடத்தை அவர் ஆய்வு செய்தார். அப்போது மகா கும்பமேளாவுக்கான கும்ப கலசத்தை அவர் நிறுவினார். அங்கு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். பின்னர் பிரயாக்ராஜில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.5,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலகின் மிகப்பெரிய திருவிழாவான மகா கும்பமேளா பிரயாஜ்ராஜில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தொடர்ந்து 45 நாட்கள் விழா நடைபெற உள்ளது. இதற்காக புதிய நகரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆன்மிக விழாவின் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது.

மகா கும்பமேளாவால் நமது நாட்டின் கலாச்சாரம், ஆன்மிக அடையாளம் புதிய உச்சத்தை தொடும். இந்தியாவில் கங்கை, யமுனா, சரஸ்வதி, காவிரி, நர்மதை உள்ளிட்ட பல்வேறு புனித நதிகள் உள்ளன. இந்த நதிக்கரைகளில் பல்வேறு புனித தலங்கள் அமைந்துள்ளன. அனைத்து புனித தலங்களில் இருந்தும் சாதுக்கள் பிரயாஜ்ராஜுக்கு வருகை தர உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் ஒன்றுகூட உள்ளனர். சாதுக்கள், ஞானிகள், சமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் திரிவேணி சங்கமத்தில் நீராட உள்ளனர். மொழி, சாதி, நம்பிக்கை வெவ்வேறாக இருந்தாலும் ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளாவில் நாம் அனைவரும் ஒன்றாகிவிடுவோம். சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்.

கடந்த கால ஆட்சிகளில் கும்பமேளாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். தற்போது மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துள்ளன. இதற்காக பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மகா கும்பமேளாவை ஒட்டி செயற்கை நுண்ணறிவு சாட்போட் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சாட் போட்டை 11 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

மகா கும்பமேளா விழாவில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு புனித தலங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. மகா கும்பமேளாவில் இந்த லட்சியம் மேலும் வலுவடையும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

x