கோவை: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, கோவையில் உள்ள, சிவன் கோயில்களில் இன்று (டிச.13) மாலை ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திகை தீபத் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவையில் உள்ள சிவலாயங்களில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டன. கோவை மதுக்கரை பகுதியில், மலையில், தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 960 படிகள் ஏறி மலை உச்சிக்கு சென்று சுவாமியை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இங்கு கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கியது. கார்த்திகை தீபம் மற்றும் பிரதோஷ விழாவையொட்டி இன்று மூலவர் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டவுடன் அங்கு திரண்டிருந்த சிவ பக்தர்கள் ‘சிவ சிவ’ என கோஷமிட்டபடி, சங்கு ஊதி தீப ஜோதியை வழிபட்டனர்.
மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இங்கு 7-வது மலையின் உச்சியில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி, ஒன்றரை அடி உயரம் கொண்ட தீபக் கொப்பரையை பக்தர்கள் சிறப்புப் பூஜைகள் செய்து அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். சிவனடியார்கள் 7-வது மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தை இன்று மாலை ஏற்றினர்.
மருதமலை முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி நேற்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் முன்புறம் உள்ள பீடத்தில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை நியூசித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் உள்ள விளக்குகள் மாடத்தில், ஏராளமான விளக்குகள் இன்று ஏற்றப்பட்டன. மேலும், கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்கு தீபங்களை வீடுகளின் முன்பும், பூஜை அறைகளிலும் ஏற்றி கடவுளை வழிப்பட்டனர். அதேபோல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் நொய்யலாற்று படித்துறையில் தீபங்கள் ஏற்றப்பட்டன.