சத்தீஸ்கர் மாநிலத்தின் அபுஜ்மத் வனப்பகுதியில் நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மாநில போலீஸார் இருவர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் நேற்று அதிகாலை முதல் தேடுதல் வேட்டையில் மாநில போலீஸாரும், மத்திய ரிசர்வ் படை போலீஸாரும் ஈடுபட்டனர். அப்போது தண்டேவாடா -நாராயண்பூர் எல்லையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டைக்குப்பின் சீருடை அணிந்திருந்த 7 மாவோயிஸ்ட்டுகளின் உடல்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதாக பஸ்தர் ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் இந்த முயற்சியை பாராட்டிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், ‘‘ மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்’’ என கூறியுள்ளார்.