புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும். மக்களவைக்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்த திட்டம் வகை செய்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பான மசோதாவை நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் இம்மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்போடு இருப்பதால், எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.