ஐபிஎல், பாஜக, ரத்தன் டாடாவை கூகுளில் அதிகம் தேடிய இந்தியர்கள்


தேடு தளமான கூகுளில் இந்த ஆண்டு இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் ஐபிஎல், டி20 உலக கோப்பை, பாஜக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நமது மனதில் எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் நமது விருப்பங்களுக்கு விடை அளிக்கும் தேடுதல் தளமாக கூகுள் உள்ளது. உலகளவில் தினமும் கோடிக்கணக்கானவர்கள் இதில் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் 2024-ல் இந்தியாவில் மக்கள் அதிகம் தேடிய விஷயங்கள் குறித்த புள்ளிவிவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் இன்டியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு முன்பு மே 12, 18 ஆகிய தேதிகளில் ஐபிஎல் அதிகம் தேடப்பட்டுள்ளது. இதையடுத்து 2024-ல் இந்தியாவில் ஒட்டுமொத்த தேடலில் 'டி20 உலக கோப்பை' இரண்டாமிடம் பெற்றுள்ளது.

அரசியலில், 'பாரதிய ஜனதா கட்சி' அதிகம் தேடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏழுகட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது.

இதையொட்டி ஜூன் 2 முதல் ஜூன் 8 வரை 'பாரதிய ஜனதா கட்சி' என்ற வார்த்தைகள் அதிகம் 'டைப்' செய்யப்பட்டு தேடப்பட்டுள்ளது.

இதுபோல் 'தேர்தல் முடிவுகள் 2024’ என்பதும் அதிகம் தேடப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024, புரோ கபடி லீக், இண்டியன் சூப்பர் லீக் ஆகியவையும் இந்தியர்களால் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வானிலை தொடர்பான கவலைகளும் இந்தியர்களிடையே எதிரொலிக்கின்றன, ஏனெனில் 2024-ல் கடும் வெப்பம் (Exessive heat) பற்றிய தேடலும் அதிகமாக இருந்தது.

ஆளுமைகளில் ரத்தன் டாடா, தேடல்களில் குறிப்பிடத்தக்க நபராக உருவெடுத்துள்ளார். தொழிலதிபரும் கொடையாளியுமான ரத்தன் டாடா கடந்த அக்டோபரில் தனது 86-வது வயதில் காலமானார். அவருக்கு ஆன்லைனிலும் ஆப்லைனிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் என பல்வேறு பிரிவுகளில் தனித்தனி புள்ளிவிவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலையில் கோடீஸ்வரர் ஆனந்த் அம்பானியை மணந்த ராதிகா மெர்ச்சன்ட், இந்தியாவில் அதிகம் கூகுள் செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூகுள் தேடலில் முதல் 10 இடங்களை பிடித்த விஷயங்கள் வருமாறு: ஐபிஎல், டி20 உலக கோப்பை, பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் முடிவுகள் 2024, ஒலிம்பிக்ஸ் 2024, கடும் வெப்பம், ரத்தன் டாடா, இந்திய தேதிய காங்கிரஸ், புரோ கபடி லீக், இண்டியன் சூப்பர் லீக் ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

x