கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான‌ எஸ்.எம்.கிருஷ்ணா (93) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கல்லூரி காலத்தில் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. வழக்கறிஞராக பணியாற்றிய போது சுயேச்சையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின்னர் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், மீண்டும் மண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார். 1970-ல் காங்கிரஸில் இணைந்த அவர் 1999-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார். பெங்களூருவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில்த்துறை ஆகியவற்றில் பெங்களூருவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். அவர் முதல்வராக இருந்தபோதுதான் கன்னட‌ நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜ்குமாரை பத்திரமாக மீட்டார்.

2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர ஆளுநராகவும், 2009-ல் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2017-ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

3 நாட்கள் துக்கம்: வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று அதிகாலையில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சித்தராமையா கூறுகையில், '' கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மண்டியாவில் புதன்கிழமை நடைபெறும் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்.

அன்றைய தினம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, 3 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்'' என்றார்.

- இரா.வினோத்

x