சென்னை: எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘எனக்கு தெரியாது’ என்று விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்” என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ‘எனக்கு தெரியாது’ என்று பதிலளித்தார். அவரின் இந்த பதில் பெரும் அதிர்வலைகளை மீண்டும் உருவாக்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது என பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பை கிளப்பினார். அவரை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து திருமாவளவன் நேற்று உத்தரவிட்டார்.
அந்த விழாவில் பேசிய விஜய், "வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்னைக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் இப்போது சொல்றேன், அவர் மனசு முழுக்க முழுக்க நம்ம கூடத்தான் இருக்கும்" என்று பேசியது சலசலப்பை உருவாக்கியது.