உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியின் கள ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய ஆணையர் அவகாசம் கோரியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியின் கோயில் இருந்தது என சம்பல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசாரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மசூதியில் 2-வது முறையாக நவம்பர் 24-ம் தேதி மீண்டும் ஆய்வு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, மசூதியில் நடந்த கள ஆய்வறிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் ஆணையர் ரமேஷ் சிங் ராகவுக்கு சம்பல் மாவட்ட சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மசூதியில் நடந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாராக உள்ளதாகவும், உடல்நலக்குறைவால் தாக்கல் செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஆணையர் ரமேஷ் சிங் ராகவ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் ரமேஷ் சிங் ராகவ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மசூதியில் நடத்தப்பட்ட கள ஆய்வறிக்கை தயாராக உள்ளது என்றும், எனது உடல்நலக்குறைவு காரணமாக ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம் தேவை என்றும் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளேன். கடந்த 4 நாட்களாக நான் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறேன்.
சீல் வைத்த கவரில் மனுவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.