டெல்லியில் உள்ள 40 பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்துள்ளது. குறிப்பாக டெல்லி ஆர்.கே.புரம், பஷ்சிம் விஹார் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது.
அந்த இ-மெயிலில் மர்ம நபர் கூறியுள்ளதாவது: நான் பள்ளிக் கட்டிடத்தின் உள்ளே பல வெடிகுண்டுளை வைத்துள்ளேன். கட்டிடத்தின் பல பகுதிகளில் சிறிய, பெரிய அளவிலான வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை கட்டிடங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால் குண்டுகள் வெடிக்கும்போது ஏராளமானோர் காயம் அடைவர். பலர் கை, கால்களை இழக்கக் கூடும். நீங்கள் அனைவரும் கை, கால்களை இழக்கத் தகுதியானவர்கள். எனக்கு 30,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்காவிட்டால், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன். இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், தங்களது மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் படைகள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், எந்தப் பள்ளியிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் அறிந்ததால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பு குவிந்தனர். இதனால் டெல்லி நகரின் முக்கிய வீதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு தவறிவிட்டது என்று டெல்லி முதல்வர் ஆதிஷி சிங் மர்லேனா குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக கடந்த மே மாதத்தில், டெல்லியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், பிற முக்கிய அரசு நிறுவனங்களுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது