மும்பை: இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திறனும், அதற்கான உரிமையும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு உள்ளது என தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ நான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அதை எதிர்கட்சி தலைவர்களால் ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார்’’ என அறிவித்தார்.
இந்நிலையில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) தலைவர் சரத் பவார் கோல்காபூரில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திறனுள்ள தலைவர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்க அவருக்கு உரிமை உள்ளது. அவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ள எம்.பி.க்கள் கடின உழைப்பாளிகளாகவும், விழிப்புடனும் உள்ளனர்’’ என்றார்