புதுடெல்லி: போப் பிரான்ஸிஸ் 2025-ம் ஆண்டுக்கு பிறகே இந்தியா வர வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பேராயர் ஜார்ஜ் ஜேக்கப் கூவகாட்டை கர்தினாலாக போப் பிரான்ஸின் நேற்று அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் வாட்டிகன் சென்றுள்ளார். போப் பிரான்ஸிஸ் இந்திய வருகை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
போப் பிரான்ஸிஸ் இந்தியா வரும்படி, அவரை சந்தித்தபோது பிரதமர் மோடி நேரடியாக அழைப்பு விடுத்தார். 2025-ம் ஆண்டு கத்தோலிக்க தேவாலயத்தின் ஜுப்ளி ஆண்டாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் வாட்டிகனில் அடுத்தாண்டு முழுவதும் சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக 2025-ம் ஆண்டுக்குப் பின்பே போப் பிரான்ஸிஸ் இந்தியா வர வாய்ப்புள்ளது. போப் பிரான்ஸிஸ் இந்தியா வருவதற்கான பயணதிட்டத்தை வாட்டிகன் முடிவு செய்யும். இவ்வாறு அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறியுள்ளார்.