புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மாநிலங்களவையில் அவரது இருக்கை எண் 222 ஆகும். கடந்த 5-ம் தேதி அவை காவலர்கள் வழக்கமான சோதனை நடத்தியபோது, அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை எண்ணியபோது மொத்தம் ரூ.50,000 இருந்தது.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், அவையில் நேற்று கூறும்போது, “கடந்த வியாழக்கிழமை அவைக் காவலர்கள் மாநிலங்களவையில் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் இருந்து ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 12.57 மணிக்கு அவைக்கு வந்தேன். சுமார் 3 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்தேன். அதன்பிறகு மதிய உணவு சாப்பிட கேண்டீன் சென்றேன். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி விட்டேன்.
ரூ.500 மட்டுமே இருந்தது: மாநிலங்களவையில் 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். நான் அவைக்கு வந்தபோது என்னிடம் ரூ.500 மட்டுமே இருந்தது. எனது இருக்கையில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்டது என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இருக்கைக்கும் பூட்டு, சாவி போட்டால் நல்லது. ஒவ்வொரு எம்பியும் அவை முடிந்து செல்லும்போது இருக்கையை பூட்டி செல்லலாம். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “பணம் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவைத் தலைவர் கூறுகிறார். அந்த விசாரணை நிறைவு பெறாத நிலையில் அபிஷேக் மனு சிங்வியின் பெயரை அவைத் தலைவர் கூறியது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “எந்த இருக்கையில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. அந்த இருக்கை யாருடையது என்று மட்டுமே அவைத் தலைவர் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும்போது, “அவையில் பணம் கண்டெடுக்கப்பட்டது மிகவும் முக்கிய பிரச்சினை. இது அவையின் கண்ணியம் சார்ந்தது. அவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தால் மாநிலங்களவையில் நேற்று ஆளும் பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “அதானி விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம். அதானி பிரச்சினையை திசை திருப்ப காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்" என்று தெரிவித்தன.