புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் பணம் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த நவ.25ம் தேதி தொடங்கிய இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிச.20ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாமன்றத்தின் இரு அவைகளும் 9ஆவது நாளாக இன்று வழக்கம்போல் கூடின. அப்போது மாநிலங்களவையில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று நேற்று (டிச. 5) கண்டெடுக்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பணத்துக்கு யாராவது உரிமை கோருவார்கள் என காத்திருந்தேன். இதுவரை யாரும் உரிமை கோரவில்லை” என தெரிவித்தார்.
ஜக்தீப் தன்கரின் இந்த அறிவிப்பை அடுத்து அபிஷேக் மனு சிங்வியை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்தால்தான் அது யாருடைய பணம் என்பது தெரிய வரும். விசாரணையை முடிக்காமல் அவைத் தலைவர் உறுப்பினரின் பெயரைக் கூறி இருக்கக்கூடாது” என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த தன்கர், “இது எனது கடமை. சபைக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கமான நாசவேலை எதிர்ப்பு சோதனையின்போது இந்த பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் மனு சிங்வி, “இதைக் கேட்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நேற்று மதியம் 12.57க்கு அவைக்கு வந்தேன். மதியம் 1 மணிக்கு அவை மூடப்படும். 1 மணி முதல் 1.30 வரை நான் கேண்டீனில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டேன். 1.30 மணிக்கு, நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினேன். நான் நேற்று கேண்டீனில் 30 நிமிடங்கள் தங்கியிருந்தேன். இது போன்ற ஒரு பிரச்சினையில் என் பெயரை இழுத்திருப்பது வினோதமாக இருக்கிறது.
ஒவ்வொரும் எம்.பி.,யும் இருக்கையை பூட்டி சாவி எடுத்து செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்து இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இது குறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.