புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனில் உள்ள பாலாஜி மடத்தின் கோயிலில் சர்வதேச இந்துக்கள் மாநாடு நடைபெற்றது. இதை இந்து ஜாக்ருதி சமிதி உள்ளிட்ட சில அமைப்பு கள் முன்னின்று மாநாட்டில் சர்வதேச அளவில் 54 இந்து அமைப்புகளின் 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் முக்கிய துறவிகள், மடாதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாநாட்டின் பொதுச் செயலாளர் சாரு தத்தா பிங்ளே கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், கோயில்கள் மசூதியாக மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வாராணசியின் கியான்வாபி மசூதி மற்றும் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி தொடர்பான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து முடிக்க வேண்டும்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவது அவசியம். அமெரிக்க ஆய்வு மையம் ஒன்று, வரும் 2050-ல் உலகின் அதிகமான முஸ்லிம்கள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்று கணித்துள்ளது. வக்பு வாரியங்கள் மூலம் நில ஜிஹாத் நடத்தப் படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், காசி, மதுரா வழக்குகளில் ஆதரவு திரட்ட நாடு முழுவதும் கையொப்பங்கள் பெறுவது, வங்கதேசத்தில் இந்துக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்திய அரசு தலையிடுவது, மாமிசங்களுக்கான ஹலால் சான்றிதழ் முறையை தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.