சண்டிகர்: டெல்லி செல்லும் போராட்டத்தை தொடங்கிய விவசாய சங்க தலைவர்களிடம், ஷம்பு எல்லையில் பஞ்சாப் போலீஸார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் - ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையைில் நேற்று குவிந்தனர். ஷம்பு எல்லையில் இருந்து இவர்கள் நடைபயணமாக டெல்லி நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஷம்பு எல்லையில் விவசாய சங்க தலைவர்களுடன் பஞ்சாப் காவல் துறை டிஐஜி மந்தீப் சிங் சித்து தலைமையில் உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் பேட்டியளித்த டிஐஜி மந்தீப் சிங் சித்து, ‘‘ டெல்லி நோக்கி அமைதியாக நடை பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லும் பேரணியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். டெல்லி போலீஸாரிடம் அனுமதி பெற்று பேரணி செல்லுமாறு, விவசாய சங்க தலைவர்களிடம் ஹரியானாவின் அம்பாலா நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்