புதுடெல்லி: சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மிக உயர்ந்த துரோகி பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் லட்சுமண் மற்றும் சம்பத் பத்ரா ஆகியோர் நேற்று ஒரு பிரச்சினையை எழுப்பினர். பிரான்ஸ் ஊடகம் ‘மீடியா பார்ட்’-ல் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்கள் கூறியதாவது:
ஓசிசிஆர்பி ( குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்) என்ற புலனாய்வு ஊடக அமைப்பு, பல நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஓசிசிஆர்பி தனது பணிக்கான நிதிக்கு கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள ‘டீப் ஸ்டேட்’ முகமைகளை சார்ந்துள்ளன. இந்த அமைப்புக்கு எங்கிருந்தாவது 70 சதவீத நிதி கிடைத்தால், இந்த புலனாய்வு ஊடக அமைப்பால் நடுநிலையாக செயல்பட முடியாது. இந்த ஓசிசிஆர்பியின் செய்திகளை அடிப்படையாக வைத்துதான், பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சிக்க ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்.
இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 324 மில்லியன் டாலர் மதிப்பில் கோவாக்சின் மற்றும் கரோனா தடுப்பு ஊசி மருந்துகளை வாங்கும் ஆர்டரை பிரேசில் ரத்து செய்துவிட்டதாக ஓசிசிஆர்பி கடந்த 2021 ஜூலையில் செய்தி வெளியிட்டது. இந்த ஆர்டர் 2021 ஜூன் மாதமே ரத்தாகிவிட்டாலும், இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ராகுல் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். இது நாட்டின் புகழை கெடுக்கும் முயற்சி.
ஓசிசிஆர்பி செய்தி அடிப்படையில்தான் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தையும் ராகுல் காந்தி எழுப்பினார். இந்திய சந்தையை சீ்ர்குலைக்கும் நோக்கில் ஓசிசிஆர்பி செய்தி வெளியிட்டது. நேசனல் ஷெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓசிசிஆர்பி செய்தி வெளியிட்டது. ஓசிசிஆர்பி மற்றும் ராகுல் காந்தியும் ஈருடல் ஓருயிர் போல் தெரிகிறது.
ராகுல் காந்தி சிலருடன் சேர்ந்து நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுகிறார். இந்தியா முன்னேற ராகுல் விரும்பவில்லை. நாடாளுமன்றம் செயல்பட அவர் விரும்பவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போதெல்லாம், ஓசிசிஆர்பியில் நாட்டுக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அந்த போலி செய்திகளை வைத்து நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது. போராட்டம் நடத்துவதற்கு பதில், பாஜகவுடன் விவாதத்தில் காங்கிரஸ் ஈடுபடலாம். நாட்டுக்கு எதிரான சக்திகள் இரவு, பகலாக செயல்படுகின்றன. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் ராகுல் காந்தி மிக உயர்ந்த துரோகி.
பிரதமர் மோடி தனது பணிகளால் மக்கள் மனதில் வாழ்கிறார். மக்களை முட்டாளாக்கும் ராகுல் காந்தியின் முயற்சி பலிக்காது.
இவ்வாறு பாஜக எம்.பி.க்கள் லட்சுமண் மற்றும் சம்பத் பத்ரா ஆகியோர் கூறினர்.