சென்னை: உலகமே பாராட்டும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்தது. இன்று மாலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோதான் இந்த ப்ரோபா 3 இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
அதாவது இஸ்ரோவின் பாகுபலி என அழைக்கப்படும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்தான் இந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டானது ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ப்ரோபா 3 திட்டத்தில் 2 செயற்கைக்கோள்கள் சூரியனின் ஒளிவட்டப்பாதையை ஆய்வு செய்ய செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியால் செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதும், வெற்றி பெறுவதும் பெருமைக்குரியது. இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிக்கும், வெற்றிக்கும் உதவிக்கரமாக பணியாற்றியவர்களும் பாராட்டுக்குரியவர்கள். உலகமே பாராட்டும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பையும், தொடர் முயற்சியையும் மேற்கொண்ட இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன். மத்திய அரசு விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்