புதுடெல்லி: தடையை மீறி நேற்று சம்பல் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காஜியாபாத் எல்லையில் உ.பி. போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பதற்றமாக சூழல் நிலவியது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜாமா மசூதி உள்ளது. இந்து கோயிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர்.
சம்பல் பகுதியில் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால் அங்கு வெளியாட்கள் நுழைய டிசம்பர் 2 வரை தடை விதிக்கப்பட்டது. பிறகு இத்தடை டிசம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பல் வன்முறைக்கு பிறகு அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும் நேற்று டெல்லியில் இருந்து சம்பல் புறப்பட்டனர். இவர்களுடன் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி - உ.பி. எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருடன் மோதல் போக்கு ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அங்கு ராகுல் காந்தி பேசுகையில், “நாங்கள் சம்பல் செல்ல விரும்புகிறோம். ஆனால் போலீஸார் எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அங்கு செல்வது எனது உரிமை. நான் தனியாக செல்லவும் தயாராக இருக்கிறேன். போலீஸாரும் என்னுடன் வரட்டும் என்றாலும் அதையும் ஏற்க மறுக்கின்றனர். சில நாட்கள் கழித்து வந்தால் அனுதிக்கிறோம் என்கின்றனர்.
இது எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைகளுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. இதுதான் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் புதிய இந்தியா. இதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போரிடுவோம்" என்றார்.
முன்னதாக, ராகுல் காந்தியை தங்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்துமாறு கவுதம புத்த நகர், காஜியாபாத் காவல் ஆணையர்கள் மற்றும் அம்ரோஹா, புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா கடிதம் எழுதியிருந்தார்.
எனினும் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் நேற்று எப்படியோ சம்பல் சென்றடைந்தனர். உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் சவுத்ரி, துணைத் தலைவர் ரிஸ்வான் குரேஷி, கட்சியின் தேசிய செயலாளர் பிரதீப் நர்வால் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் சம்பல் வன்முறையில் இறந்த சிலரின் குடும்பத்தினரை சந்தித்தனர். அப்போது இந்த குடும்பத்தினருடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தொலைபேசியில் பேசினார்.
ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பினரும் நேற்று சம்பல் வந்திருந்தனர். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
உ.பி. எல்லையில் ராகுல் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி. முகம்மது ஜாவேத் நேற்று மக்களவையில் எழுப்பினார். அப்போது அவையை நடத்திய பாஜக மூத்த எம்.பி. ஜெகதாம்பிகா பால், “நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்தித் தலைவருக்கு வெளியில் என்ன வேலை? அவர் அவையில் இருந்திக்க வேண்டும்" என்றார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாஜக மாநிலங்களவை எம்.பி. சுதன்ஷு திரிவேதி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இதுபோன்ற சூழ்நிலைகளில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் நடந்த வன்முறையிலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சென்று சந்திக்கவில்லை. முஸ்லிம் வாக்கு வங்கிக்காக சமாஜ்வாதி கட்சியுடன் போட்டி போடுவதற்காகவும் ஊடக கவனத்தை பெறுவதற்காகவும் காங்கிரஸ் இவ்வாறு நடந்துகொள்கிறது" என்றார்.
உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், “அகிலேஷ், ராகுல் ஆகிய இருவருமே முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் செய்கின்றனர். நாடகமாடுகின்றனர். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்படுவது நிச்சயம்" என்றார்