சண்டிகர்: அமிர்தசரஸ் பொற்கோயிலில் சேவை செய்த முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
பஞ்சாபில் கடந்த 2015-ம் ஆண்டு அகாலி தளம் கட்சி ஆட்சியில் இருந்தபோது துணை முதல்வராக இருந்தவர் சுக்பிர் சிங் பாதல். அப்போது சீக்கியர்களின் புனித நூலை அவமதித்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கியதாக சுக்பிர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தக்த், சீக்கிய குருத்வாராக்களில் கழிவறையை சுத்தம் செய்வது, பாத்திரம் சுத்தம் செய்வது உட்பட பல்வேறு சேவைகளில் ஈடுபட வேண்டும் என சுக்பிர் சிங்குக்கு கடந்த 2-ம் தேதி தண்டனை வழங்கியது.
இதன்படி, சுக்பிர் சிங் பாதல் காயமடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் நேற்று காலையில் அமிர்சரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு சென்றார். சேவை புரிவோருக்கான சீருடை அணிந்தபடி, நுழைவு வாயில் அருகே சேவையில் ஈடுபட்டிருந்த அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களில் ஒருவர் அந்த நபரின் கைகளை மேல் நோக்கி தட்டி விட்டுள்ளார். இதனால், துப்பாக்கி குண்டு அதிர்ஷ்டவசமாக யார் மீதும் படாமல் அங்கிருந்த சுவரில் தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி: துப்பாக்கியால் சுட்டவர் பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டம் சவுரா கிராமத்தைச் சேர்ந்த நரைன் சிங் சவுரா (68) என போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான பப்பர் கல்சாவுடன் சவுராவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சண்டிகரில் கடந்த 2004-ம் ஆண்டு புரெயில் சிறைக்கு அடியில் 104 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டி, 4 பேர் தப்பிச் சென்றது தொடர்பான வழக்கில் நரைன் சிங் மூளையாக செயல்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சவுரா, 5 ஆண்டுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.