சம்பல் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதன்கிழமை காலையில் காஜிபூர் வந்தடைந்தனர். ஆனால், அங்கு அவர்கள் தொடர்ந்து சம்பலுக்கு நுழையாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதிக்குச் செல்லும் வழியில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காஜிபூர் எல்லையில் தடுத்து போலீஸாரால் நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
“உரிமை மறுக்கப்படுகிறது” - ராகுல் காந்தி ஆவேசம்: சம்பல் பகுதிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் போலீஸாருடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் அதனையும் ஏற்கவில்லை. இப்படி அனுமதி மறுப்பது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது” என்று ஆவேசமாக கூறினார்.
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகிய மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் புதன்கிழமை மும்பை விதான் பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்கிறார்.
அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக - “திமுக அரசு தனது அதிகார பலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தி, ‘சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் வெள்ள பாதிப்பு’ என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறது. சாத்தனூர் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
“விஜய் எண்ணத்தை பாராட்ட வேண்டும்” - சீமான் - “விஜய்யால் மக்கள் களத்தில் போய் நிற்கமுடியாது. காரணம், அவர் போய் அங்கு நின்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். அதனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி நடந்தால் அதற்கு ஒரு விமர்சனம் எழும். விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது மழை நிவாரண உதவி செய்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச விவகாரம்: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்து ஆன்மிக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர், இந்து அமைப்பினரை போலீஸார் கைது செய்து, பேருந்துகள் மூலம் அழைத்து சென்று சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டமும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
புயல் மீட்பு பணிகள் - அரசுக்கு விசிக கேள்வி - “ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு 20 பூத்துக்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு இடைத்தேர்தல் பாணியில், புயல் - கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை?” என்று விசிக கேள்வி எழுப்பியுள்ளது.
‘அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை’ - “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அதேநேரம் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. அதிக பாதிப்பினால் தேர்வை நடத்தமுடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்” என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு: தமிழகத்தில் இம்மாதம் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு - பஞ்சாப் பரபரப்பு: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் சேவை செய்துகொண்டிருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் ஒரு முன்னாள் பயங்கரவாதி என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியா அரசியல் பரபரப்பு: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.