‘சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் மோடி


புதுடெல்லி: குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி பயணிகள் ரயில் எரிக்கப்பட்டது. இதில் இந்துக்கள் 59 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அதன் பிறகு குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி மற்றும் அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தை அடிப் படையாக கொண்டு பாலிவுட்டில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

இந்தப் படம் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். உடன் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். தீரஜ் சர்மா படத்தை இயக்கியுள்ளார். சோபா கபூர். ஏக்தா ஆர் கபூர். அமுல் வி மோகன், அன்சூல் மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பாஜக ஆளும் பல மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தின் அரங்கில் சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை நேற்று மாலை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருடன் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இத்திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, “உண்மை வெளிவருவது நல்லது. அதுவும் சாமானிய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உண்மை வெளிப்படுவது நல்லது. போலி வர்ணனைகள் குறிப்பிட்ட சில காலம் தான் உயிருடன் இருக்க முடியும். உண்மை நிச்சயம் வெளிவந்தே தீரும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x