மகாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி: நிர்மலா சீதாராமன், விஜய் ருபானி தலைமையில் நாளை பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்


மும்பை: மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம், மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி தலைமையில் நாளை நடைபெறும் என்றும் இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288-ல் 230 இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா (ஷிண்டே) 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், முதல்வர் பதவியை மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவுக்கே வழங்க வேண்டும் என அவரது கட்சியினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்குவதால் அக்கட்சியின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வரை தேர்வு செய்யும் விவாகாரத்தில் பிரதமர் மோடியின் முடிவை ஏற்போம்” என தெரிவித்தார். எனினும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை காபந்து முதல்வராக தொடருமாறு அவரை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்பார் என்றும் சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் துணை முதல்வராக பதிவியேற்பர் என்றும் தகவல் வெளியானது.

இதனிடையே, அமைச்சரவையில் உள் துறையை ஒதுக்குமாறு ஷிண்டே அணியினர் கேட்பதாகவும் இதை ஏற்க பாஜக மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசு பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

அதேநேரம் பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆதரவளிக்கும் என அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கான பாஜகவின் மேலிடப் பார்வையாளர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர். இவர்கள் தலைமையில் நாளை பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பாஜக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வரும் 5-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பாஜக தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிவசேனா (ஷிண்டே) சார்பில் அக்கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் நேற்று கூறும்போது, “நான் மகாராஷ்டிர துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன். அதிகாரம் மிக்க பதவி வகிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மாநில அமைச்சர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

x