புதுடெல்லி: அதானி, மணிப்பூர் விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி, மணிப்பூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீதி வேண்டும், நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அவை மீண்டும் கூடியதும், அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என குறிப்பிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என 20 பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஏற்க முடியாது எனவும் அவையின் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். இதை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் திட்டமிட்ட ரீதியில் மட்டுமே நடைபெறும் என்று ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். அவரது வேண்டுகோளை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக தன்கர் அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கின. முன்னதாக குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அதானி, மணிப்பூர் விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.