ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரியங்காவும் அவரது அண்ணன் ராகுல் காந்தியும் நேற்று அங்கு சென்றனர்.
மலப்புரம்,கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் இருவரும் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: லஞ்ச விவகார வழக்கில் தொழிலதிபர் அதானி சிக்கி உள்ளார். இதுதொடர்பான வழக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் அவர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அவரை பாதுகாத்து வருகிறார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துகிறோம். ஆனால் மத்திய அரசு, விவாதம் நடத்தகூட அஞ்சுகிறது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை கேரள அரசு வழங்க வேண்டும். இதற்காக கேரள அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
பிரியங்கா காந்தி பேசியதாவது: கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறேன். முதல்முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எனக்காக பிரச்சாரம் செய்தேன். இடைத்தேர்தலில் என்னை அமோக வெற்றி பெற செய்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வயநாட்டின் அனைத்து வீடுகளுக்கும் வருவேன். உங்களுக்காக அயராடு பாடுபடுவேன். உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பேன். வயநாடு தொகுதி எம்பி என்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்