அரவிந்த் கேஜ்ரிவால் மீது மை வீசிய மர்மநபர் - நடைபயணத்தின்போது தீடீர் பரபரப்பு


புதுடெல்லி: இன்று நடைபயணத்தின் போது டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஒருவர் மை ஊற்றினார். இதனையடுத்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து அவரைத் தாக்கினார்கள்.

தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நடந்து சென்றபோது, ஒரு நபர் அவர் மீது மை போன்ற திரவத்தை வீசினார். அவரை பிடித்து ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக தாக்கினர். பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் கைது செய்யபட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார். "டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை" என்று பரத்வாஜ் கூறினார்.

இதுபற்றி டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டுகெஜ்ரிவால் தனது "பழைய தந்திரத்தை" செய்துள்ளார் என்றார்

இதுபற்றி ஆம் ஆத்மி தனது எக்ஸ் பதிவில் "டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ஒரு முன்னாள் முதல்வர் நாட்டின் தலைநகரில் பாதுகாப்பாக இல்லாவிட்டால், சாமானியர்களின் கதி என்ன? மத்திய பாஜக ஆட்சியில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சரிந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளது. .

x