எதிர்க்கட்சிகளின் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
கடந்த 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், சம்பல் கலவரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் நாளில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
நவம்பர் 26-ம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை. கடந்த 27, 28-ம் தேதிகளில் அதானி விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரு நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நேற்று காலை கூடியது. மக்களவையில் வழக்கம்போல அதானி, சம்பல், மணிப்பூர் விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக மக்களவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு அவை கூடியபோது மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறும்போது, “மக்கள் நலன் சார்ந்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.
அவைத் தலைவரின் அறிவுரையை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.
சமாஜ்வாதி எம்பி ராம் கோபால் கூறும்போது, “அதானி, சம்பல், மணிப்பூர் விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று கோருகிறோம். ஆனால் மத்திய அரசு விவாதத்துக்கு அஞ்சுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம்" என்று தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை நாள்தோறும் 10 நிமிடங்கள் மட்டுமே செயல்படுகிறது. இதன்படி கடந்த 4 நாட்களில் 40 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது. மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்