ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன் - இண்டியா கூட்டணி உற்சாகம்


ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டின் 14வது முதல்வராக மொராபாடி மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இன்று மாலை 4 மணியளவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் பர்ஹைத் சட்டமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட ஹேமந்த் சோரன், நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்

ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 81 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களை கைப்பற்றியது.

ஜேஎம்எம் கட்சி போட்டியிட்ட 43 இடங்களில் 34 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் 21 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்) 2 இடங்களையும் பெற்றன.

x