மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் பிளவு இல்லை என்று சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தினார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்விஏவை விட்டு வெளியேறவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில், 288 சட்டமன்றத் தொகுதிகளில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை வென்று மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றது. பாஜக 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களையும் பெற்றன.
பெரும் பின்னடைவை சந்தித்த மகா விகாஸ் அகாடி 46 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதில் காங்கிரஸ் 16 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 10 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 20 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனவே மகா விகாஸ் அகாடி கூட்டணி உடைகிறது என்ற சர்ச்சை எழுந்தனர்.
இதனையடுத்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சய் ராவத், “2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி தலைமையில் ஒன்றாகப் போராடி வெற்றி பெற்றோம். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுபோன்ற வதந்திகளை யாராவது கூறினால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, உத்தவ் சேனாவை கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை" என்றார்.
மகா விகாஸ் அகாதி மக்களவை பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவின் 48 இடங்களில் 31 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக காங்கிரஸ் 13 இடங்களிலும், உத்தவ் சேனா 9 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
சிவசேனா (யுபிடி) எம்.வி.ஏ-வில் இருந்து தனித்துப் போட்டியிடுமா என்று கேட்கப்பட்டதற்கு, “கூட்டணித் தலைவர்கள் சேர்ந்து இது குறித்து முடிவெடுப்பார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போதுதான் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இனி என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும்" என்று சஞ்சய் ராவத் வலியுறுத்தினார்.