எதிர்க்கட்சிகளின் கடும் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!


புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கியதும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல, மக்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், நான் வாய்ப்புகளை வழங்குவேன், அவை முறைப்படி இயங்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து வலியுறுத்தினார். அமளி தொடர்ந்ததால், அவை முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே, வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் விடுத்த கோரிக்கை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி மாநிலங்களவையிலும் கடும் அமளி நிலவியது. இதையடுத்து, அவையை முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஜக்தீப் தன்கர் கூறினார். மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பின. அவை திட்டமிட்ட ரீதியில் நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மீண்டும் நாளை காலை 11 மணிக்கு கூடும் என்றும், அதுவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என்றும் தன்கர் குறிப்பிட்டார்.

x